பெருந்துறை சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகளை திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் - தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

பெருந்துறை சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகளை திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம்தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது நடைபெற்றது.

Update: 2020-04-17 22:00 GMT
சென்னிமலை, 

பெருந்துறை சிப்காட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இந்தநிலையில் வருகிற 20-ந் தேதி முதல் தொழிற்சாலைகள் திறப்பதற்கான ஆலோசனை கூட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு பெருந்துறை தொகுதி தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ. முருகேசன், பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார், தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விளக்கப்பட்ட ஆலோசனைகள் விவரம் வருமாறு:-

வருகிற 20-ந் தேதி முதல் அத்தியாவசியமான தொழிற்சாலைகளை திறப்பதற்கு கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். 30 சதவீத தொழிலாளர்களை மட்டுமே நிறுவனத்தில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஒரு ஷிப்ட் முடிந்தது அடுத்த ஷிப்டுக்கு தொழிலாளர்கள் செல்லும்போது ஒரு மணி நேர இடைவெளி இருக்கவேண்டும்.

நிறுவனத்திலேயே வேலை செய்யும் தொழிலாளர்களையும், அதேபோல் தொழிற்சாலை உள்ள பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களை மட்டும் வேலைக்கு அமர்த்த வேண்டும். வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வரக்கூடாது. தொழிலாளர்களை அழைத்து வர 30 பேர் அமரும் வாகனத்தில் 15 பேரை மட்டுமே அழைத்து வர வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ பேசும்போது, ‘சிப்காட் பகுதி ஏராளமான பொதுமக்கள் தங்களது வாழ்க்கையை இழந்து உள்ளனர். அதனால் இந்த சமயத்தில் தொழில் அதிபர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்து எடுக்க வேண்டும்.

நிறுவனங்களில் இருந்து 30 சதவீதம் பங்குதொகையை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்‘ என்றார். சிப்காட் திட்ட அலுவலர் அன்பரசு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ் (சென்னிமலை), சரவணன் (பெருந்துறை), மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சரவணகுமார் மற்றும் சிப்காட் பகுதி தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்