வீட்டில் இருந்து வெளியே வரும் போது முக கவசம் அணியாவிட்டால் அபராதம் - புதுச்சேரியில் இன்று முதல் அமல்

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Update: 2020-04-17 08:43 GMT
புதுச்சேரி,

கடந்த மாதம் 25-ந்தேதி நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்து மத்திய அரசு உத்தரவிட்டது. கடந்த 14-ந் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை மே 3-ந்தேதி வரை நீடித்து பிரதமர் மோடி அறிவித்தார். புதுச்சேரியிலும் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் மக்கள் சந்தித்து வரும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறைகளை தளர்த்தி வருகிற 20-ந்தேதி முதல் சில பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். தற்போது 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,915 பேர் கண்காணிப்பில் உள்ளனர். நமது மாநிலத்தில் பாதிப்பு குறைந்து வருகிறது. வருகிற 20-ந் தேதி முதல் தொழிற்சாலைகள் திறக்கப்பட உள்ளன. நமது பக்கத்து மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் திறக்கப்படும் போது பக்கத்து மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே நேரத்தில் தற்போது தொழிற்சாலைகளில் தங்கி இருப்பவர்கள் தொடர்ந்து வேலை செய்யலாம். அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு.

வெளி மாநிலத்தவர்களை புதுச்சேரிக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த காவல்துறை, வருவாய் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் திறக்கப்படும் போது அதிக அளவில் மக்கள் வெளியே வருவார்கள். அதேநேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்படுகிறது. அரசு சார்பில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தரவேண்டும். மக்களின் உயிரை காக்க எந்தவித தியாகத்திற்கும் தயாராக உள்ளோம்.

கொரோனா வைரஸ் தொற்றினை பரிசோதிக்க தேவையான உபகரணம் நம்மிடம் இல்லை. சோதனை நடத்த ஜிப்மர் மட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகம் பேருக்கு வேகமாக பரிசோதனை செய்ய முடியவில்லை. சோதனை உபகரணங்களை சீனாவிடம் மத்திய அரசு வாங்கியுள்ளது. நமக்குத் தேவையானதை மத்திய அரசு தர வேண்டும்.

நாம் பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முக கவசம் அணியாமல் தான் வருகின்றனர். அவ்வாறு முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன்படி இன்று முதல் (வெள்ளிக்கிழமை) இந்த நடவடிக்கை அமல் படுத்தப்படுகிறது.

வருகிற 20-ந் தேதி அரசு அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன. அப்போது நிறைய பேர் அலுவலகம் வருவார்கள். இரு சக்கர வாகனங்களில் 2 பேர் செல்லக் கூடாது. ஒருவர் தான் செல்ல வேண்டும். சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடித்தால் தான் நாம் கொரோனா தொற்றினை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்