நகராட்சி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரிந்த தீ - தீயணைப்பு படைவீரர்கள் போராடி அணைத்தனர்
கரூர் நகராட்சி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரிந்த தீயை தீயணைப்பு படைவீரர்கள் போராடி அணைத்தனர்.
கரூர்,
கரூர் அரசு காலனி அருகே வாங்கல் மெயின்ரோட்டில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு ஏக்கர் கணக்கில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. தற்போது கரூர் நகராட்சி சார்பில் குப்பை மேலாண்மை திட்டத்தின்கீழ் மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்காகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதனால் குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப்படுவதில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை, நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்கனவே கொட்டப்பட்டிருந்த குப்பையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக கரூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி விவேகானந்தன் அறிவுறுத்தலின் பேரில் கரூர் நிலைய அதிகாரி விஜயகுமார் உள்பட தீயணைப்பு படைவீரர்களும், புகளூரில் இருந்து தீயணைப்பு படைவீரர்களும் அங்கு வருகை தந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் நீண்டநேரமாக ஈடுபட்டனர். குப்பைகள் அதிகளவு கிடந்ததால் அங்கு புகைந்து கொண்டே இருந்தது. இதனால் அதனை அணைப்பதில் தீயணைப்பு படைவீரர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
எனினும் தொடர்ச்சியாக அவர்கள் தீயை அணைக்கும் பணியில் இரவு வரை ஈடுபட்டனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து நேற்று காலை மீண்டும் தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு இரவு தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதுமே புகைமண்டலமாகவே காட்சியளித்தது.