மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மண்டல சிறப்பு அதிகாரிகள் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மண்டல சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2020-04-17 06:43 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மண்டல சிறப்பு குழுவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்பிரமணியன், கூடுதல் டி.ஜி.பி. வினித்தேவ் வான்கடே ஆகியோர் கடலூர் வந்தனர்.

பின்னர் அவர்கள் மாவட்டத்தில் இது வரை எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்து, பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் நேற்று அவர்கள் பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

கடலூர் முதுநகரில் சீல் வைக்கப்பட்ட தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 117 வெளி மாநில தொழிலாளர்கள் அருகில் உள்ள வேறு இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கி இருந்த இடத்துக்கு மண்டல சிறப்பு குழு அதிகாரிகள் சென்றனர்.

அவர்களிடம் தேவையான உணவு பொருட்கள் கிடைக்கிறதா? என்று விசாரித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு துவரம் பருப்பு, எண்ணெய், அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

அப்போது அங்கிருந்த தனியார் தொழிற்சாலை நிர்வாகிகளிடம், தொழிலாளர்களை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும். யாருக்காவது காய்ச்சல், இருமல், சளி இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

அதன்பிறகு பரங்கிப்பேட்டையில் தனியார் அனல் மின் நிலையத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று அங்கும் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து பரங்கிப்பேட்டையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள், அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதேபோல் லால்பேட்டையிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி இருந்த வீடுகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மண்டல சிறப்பு குழு அதிகாரிகள் சுப்பிரமணியன், வினித்தேவ் வான்கடே ஆகியோர் நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

அவர்களுடன் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ் குமார், சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்