தொகரப்பள்ளி காப்பு காட்டில் திடீர் ‘தீ’ - தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்

தொகரப்பள்ளி காப்பு காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

Update: 2020-04-16 22:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ல் ஒரு பங்கு வனப்பகுதியாக உள்ளது. இங்குள்ள வனப்பகுதிகளில் யானைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் அடிக்கடி சமூக விரோதிகள் சிலர் மரங்கள், செடிகளுக்கு தீ வைப்பது தொடர் கதையாகி வருகின்றது

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொகரப்பள்ளி காப்பு காட்டில் கடும் வறட்சி காரணமாக மரங்கள், செடிகள் காய்ந்து போய் இருந்தன. நேற்று முன்தினம் திடீரென்று அங்கு தீப்பிடித்து கொண்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவி மளமளவென எரியத்தொடங்கியது. இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தீ காப்பு காட்டின் நடுப்பகுதியில் பரவி இருந்ததால் தீயணைப்பு வாகனத்தால் மேலே செல்ல முடியவில்லை. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று பச்சை செடி, தழைகளை வெட்டி போட்டு தீயை போராடி அணைத்தனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் எரிந்து கருகின.

இந்தநிலையில் நேற்று காலையும் அந்த பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் சென்று பார்வையிட்டனர். தொகரப்பள்ளி காப்பு காட்டில் மான்கள், முயல்கள், மலைப்பாம்புகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. அவை எதுவும் தீயில் எரிந்து இறந்து விட்டனவா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்