ஊரடங்கையொட்டி மாவட்டத்தில் சோதனை: சட்ட விரோதமாக மது விற்ற 175 பேர் கைது - 2,447 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
ஊரடங்கையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 175 பேர் கைது செய்யப்பட்டு, 2,447 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. நாமக்கல் மாவட்டத்திலும் மொத்தம் உள்ள 188 மதுக்கடைகளும் மூடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறதா? சாராயம் காய்ச்சப்படுகிறதா? என கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டு உள்ளார். அவரது உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமு மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கடந்த 24-ந் தேதி முதல் மதுவிலக்கு தொடர்பாகவும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்தல் தொடர்பாகவும் 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 175 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
250 லிட்டர் ‘கள்’, 37 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் 2,447 லிட்டர் சாராய ஊறலும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர சட்ட விரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10,620 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.