நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி டிரைவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2020-04-17 05:24 GMT
பெரம்பலூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் ஓடவில்லை. அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் ஷேர் ஆட்டோக்கள், பயணிகள் ஆட்டோக்கள், தனியார் பஸ்கள், கால் டாக்சிகள், கார்கள், வேன்கள், சரக்கு வாகனங்கள் லாரிகள், கனரக வாகனங்கள் ஓடவில்லை. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஊரடங்கு உத்தரவினால் வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள் வருமானமின்றி வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்றனர்.

இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட 3 பிளஸ் 1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளரும், ஆட்டோ டிரைவரான ரெங்கநாதன் கூறுகையில், கொரோனா வைரஸ் நாட்டையே முடக்கி போட்டு, ஊரடங்கு உத்தரவினால் அன்றாட உழைத்து வாழ்கை நடத்தக்கூடிய அனைத்து வகையான வாகன டிரைவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் ஓடி வருகின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவினால், அந்த ஷேர் ஆட்டோக்களின் உரிமையாளர்கள், ஷேர் ஆட்டோவை வாடகைக்கு ஓட்டும் டிரைவர்கள் உணவு பொருட்கள் வாங்குவதற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு உதவி தொகையாக ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் 2-வது முறையாக கூடுதலாக ரூ.1,000 உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் இந்த தொகை குடும்பம் நடத்த போதாது. எனவே அரசு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்யாத, புதுப்பிக்காத அனைத்து வகையான வாகன டிரைவர்களுக்கும் அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றார்.

கார் டிரைவர் ராஜூ கூறுகையில், வாடகை கார், வேன்களை ஓட்டும் டிரைவர்களுக்கு ஆண்டுதோறும் கோடை கால விடுமுறையில் தான் சுற்றுலா உள்ளிட்ட நிறைய சவாரிகள் வரும். நல்ல வருமானமும் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்து வெளியே கூட போக முடியாமல் வருமானமின்றி தவிக்கிறோம். ஒவ்வொரு நாளையும் கழிப்பதற்கு மிகுந்த கஷ்டப்படுகிறோம். பறவைகள் போல் சுற்றி வந்த கார், வேன்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திலேயே நிற்கிறது. இதனால் வருமானம் ஏதும் இல்லாததால், அத்தியாவசிய பொருட்களை கூட போதிய அளவு வாங்க பணம் இல்லாமல் தவித்துபோகிறோம். எனவே தமிழக அரசு வாடகை கார், வேன்களை ஓட்டும் டிரைவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து டிரைவர்கள் சங்கத்தினர் ஊரடங்கு உத்தரவினால் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதி உதவி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்