திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்ட வாலிபர் ‘திடீர்’ சாவு

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் சேர்க்கப்பட்ட வாலிபர் திடீரென இறந்தார்.;

Update: 2020-04-16 22:00 GMT
செங்கம்,

செங்கம் அருகே புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 28). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இருக்குமோ என்று மருத்துவக்குழுவினர் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

முன்னதாக அவரது ரத்த மாதிரி கொரோனா வைரஸ் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று சிவா திடீரென உயிரிழந்தார். இதனால் புளியம்பட்டி கிராமத்தில் சிவா கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் என வதந்தி பரவியது.

தொடர்ந்து நேற்று மதியம் சோதனைக்கு சென்ற சிவாவின் ரத்த மாதிரியின் முடிவு வந்தது. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று முடிவு வந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் சிவாவின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து புளியம்பட்டு கிராமத்தில் சுகாதாரத்துறையினர் துப்புரவு பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி, குளோரின் பவுடர் தெளித்தனர்.

மேலும் செய்திகள்