ஊரடங்கு நீட்டிப்பால் தவிப்பு: குமரியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற தொழிலாளர்கள் - 40 கி.மீட்டரை கடந்த போது போலீசில் சிக்கினர்

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிப்பால் தவித்த வெளி மாவட்ட தொழிலாளர்கள், குமரியில் இருந்து நடந்தே சொந்த ஊருக்கு செல்ல முயன்றனர். 40 கி.மீட்டரை கடந்த போது அவர்கள் போலீசிடம் மாட்டிக் கொண்டனர்.

Update: 2020-04-16 22:00 GMT
ஆரல்வாய்மொழி, 

குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே தனியாருக்கு சொந்தமான மாறாமலை எஸ்டேட் உள்ளது. இங்கு கிராம்பு, மிளகு, வாழை மற்றும் உயர்ரக மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த எஸ்டேட்டில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஊருக்கு செல்ல முடியாமல் எஸ்டேட் தொழிலாளர்கள் பரிதவித்தனர். 21 நாள் ஊரடங்கு முடிந்ததும், தங்கள் சொந்த ஊருக்கு செல்லலாம் என திட்டமிட்டு இருந்தனர். ஆனால் மேலும் 19 நாட்கள் அதாவது மே மாதம் 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் செய்வதறியாது திகைத்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாறாமலை எஸ்டேட்டில் இருந்து தென்காசி மாவட்டம் புளியரை பகுதியை சேர்ந்த 8 பேரும், அருகில் உள்ள பால்குளம் எஸ்டேட்டில் இருந்து நெல்லையை சேர்ந்த ஒரு நபரும் சேர்ந்து சொந்த ஊருக்கு நடக்க தொடங்கினர்.

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்தபடி சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்ற தொழிலாளர்கள், ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் இருந்த போலீசாரிடம் சிக்கினர். ஊரடங்கு அமலில் உள்ளதால் சொந்த ஊருக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் போலீசார், தொழிலாளர்களை ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், தோவாளை தாசில்தார் ராஜேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், ஆரல்வாய்மொழி டாக்டர் ஜெனிபர் மற்றும் சுகாதார ஆய்வாளர் அன்வர் அலி ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் தொழிலாளர்கள் 9 பேருக்கும் காய்ச்சல் ஏதேனும் இருக்கிறதா? என சோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை என தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, எங்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் எங்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறது. அதனால் வேலை பார்த்த சம்பளத்தை வீட்டுக்கு சென்று கொடுப்பதற்காக, நாங்கள் நடந்தே சொந்த ஊருக்கு செல்ல முடிவு எடுத்தோம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பின்னர் 9 பேருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்ததோடு, எஸ்டேட் உரிமையாளரை வரவழைத்து தொழிலாளர்களை ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்