திருக்கழுக்குன்றத்தில் போலீசார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டவர் கைது

திருக்கழுக்குன்றத்தில் போலீசார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-04-16 22:15 GMT
கல்பாக்கம், 

திருக்கழுக்குன்றம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார், ஊரடங்கு உத்தரவையொட்டி நேற்று காலை திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் செல்போனுக்கு ஒரு வீடியோ வந்தது. அதை பார்த்தபோது, திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் இருந்து வாலிபர் ஒருவரும், அவருக்கு பின்னால் 3 பேரும் வெளியே நடந்து வருவது போலவும், அதன் இருபுறமும் பெரிய அரிவாளுடன் அந்த வாலிபர் நிற்பது போன்ற புகைப்படமும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகி இருந்தது.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகரிடம் அவர் தகவல் தெரிவித்தார். பின்னர் அவரது உத்தரவின்பேரில் நடத்திய விசாரணையில் அந்த வீடியோவை வெளியிட்டது திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரவர்மா (வயது 22) என்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், எங்கள் மீது அடிக்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்வதால் அந்த வீடியோவை வெளியிட்டேன் என்றார். அவருக்கு உடந்தையாக 2 பேர் இருந்ததாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் மகேந்திரவர்மா மீது அவதூறான வீடியோ வெளியிட்டதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்