காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள்: தொல்லியல் துறை முதன்மை செயலாளர் ஆய்வு

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மண்டல சிறப்பு பணிக்குழு அதிகாரியும், தொல்லியல் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் டி.உதயச்சந்திரன் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-04-16 22:30 GMT
காஞ்சீபுரம், 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்புக்குள்ளான இடங்கள் கண்டறியப்பட்டு 9 வார்டுகள் மாவட்ட நிர்வாகத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை தவிர்த்திடும் பொருட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை மண்டல சிறப்பு பணிக்குழு அதிகாரி, தொல்லியல் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் டி.உதயச்சந்திரன் மற்றும் சிலை கடத்தல் பிரிவு காவல் துறை தலைவர் டி.எஸ்.அன்பு ஆகியோர் தேரடி வீதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு தனிமை பிரிவு மற்றும் காய்ச்சல் பிரிவிற்கு சென்று பார்வையிட்டனர்.

மேலும் மருத்துவமனையில் புற மற்றும் உள் நோயாளிகள் பிரிவுகளில் நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு செய்தனர்.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வையாவூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தை மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

கண்காணிப்பு

மேலும் காஞ்சீபுரம் அண்ணா அரங்கத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு ஏதுவாக செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி ஸ்ரீபெரும்புதூரில் கூட்டாக தங்கி பன்னாட்டு தொழிற்சாலை மற்றும் சிறு, குறு தொழிற்சாலைகளில் கட்டுமானம் உள்ளிட்ட தொழில் களில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் 72 நபர்கள் மாவட்ட நிர்வாகத்தால் ஸ்ரீபெரும்புதூரில் தங்க வைக்கப்பட்டு மூன்று வேளையும் உணவளிக்கப்பட்டு மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தொழிலாளர்கள் தங்கும் இடத்தினையும் அவர்கள் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, நகராட்சி என்ஜினீயர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்