பறிமுதல் வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
மதுரையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி நகரில் தேவையில்லாமல் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 56 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க அரசு நேற்று உத்தரவிட்டது. அதில் ஒரு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு நாளைக்கு 10 வாகனங்கள் மட்டும் வழங்க வேண்டும். அனைத்து வாகனங்களையும் ஒரே நாளில் வழங்க கூடாது. மேலும் அந்த வாகனங்களையும் பகல் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தது.
அதன்படி மதுரை நகரில் கடந்த மாதம் 23-ந் தேதியில் இருந்து கடந்த 15-ந்தேதி வரை நகரில் 4,550 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். அதன் பேரில் கடந்த மாதம் 23-ந் தேதியில் இருந்து 31-ந்தேதி வரை நகரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை போலீசார் வழங்க முடிவு செய்தனர்.
இதன்படி இந்த தேதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களை உரிய ஆவணங்களுடன் மதுரை ஆயுதப்படை மைதானத்திற்கு வருமாறு கேட்டு கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரும் நேற்று காலை அங்கு வந்து உரிய ஆவணங்களை காண்பித்து உறுதி மொழி கடிதம் அளித்து தங்களின் வாகனங்களை பெற்று கொண்டனர். அதன்படி நகரில் நேற்று ஒரு நாளில் 7 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 194 மோட்டார் சைக்கிள் என மொத்தம் 201 வாகனங்களை போலீசார் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் செயல்படக்கூடிய நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை யாரும் சாதாரணமாக கருத வேண்டாம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் முடியும் வரை அரசு வேலைகளுக்கு செல்ல முடியாது. பாஸ்போர்ட் பெற முடியாது. அதேபோல தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேரவும் முடியாது.
போலீஸ் துறையினரின் விசாரணை அறிக்கை பெற்ற பிறகே பணிக்கு அமர்த்தப்படுவீர்கள். எனவே இளைஞர்களும், பொதுமக்களும் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வந்து வழக்கில் சிக்கி வாழ்க்கையை தொலைக்காமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மதுரை நகரில் தடை உத்தரவை மீறியதாக 3,853 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.