தமிழக வனப்பகுதியில் அழிந்து வரும் வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் - வனஆர்வலர்கள் கோரிக்கை

தமிழக வனப்பகுதியில் அழிந்து வரும் வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-04-16 22:15 GMT
தளி, 

இயற்கை படைத்த அற்புதங்களில் ஒன்று வனப்பகுதி. அதில் புற்கள் செடிகள் மரங்கள் நிறைந்த பசுமை சோலை. மனதை வருடும் காற்று, கூச்சலிடும் பறவைகள், வெள்ளைக்கோடு போன்ற அமைப்பில் ஆறுகள், மேடு பள்ளங்களாக மேகம் தழுவிய மலைக்குன்றுகள் என வார்த்தைகளால் விவரிக்க இயலாத அற்புதம் நிறைந்தது வனம். அதை வாழ்விடமாகக் கொண்டுள்ள வன விலங்குகள் நமக்கு வாழ்வளிக்க அதன் வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றன. அதில் வரையாடுகளும் அடங்கும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டது வரையாடுகள். இது நமது மாநிலத்தின் விலங்காகும். பார்ப்பதற்கு அழகாகவும், எச்சரிக்கை உணர்வும் மிகுந்த விலங்காகும். இது புற்களை உணவாகக்கொள்ளும் தாவர உண்ணி. இதன் ஆயுட்காலம் 9 ஆண்டுகளாகும். நிலமட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் பசுமையான பகுதியில் வசிப்பிடத்தை அமைத்துக்கொள்கிறது. வரையாடுகள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வாழும் தன்மையுடையது.

குட்டி போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி வகையை சேர்ந்தது. பருவகாலம் வந்ததுடன் இணை சேர்வதற்கான போட்டியில் வெல்லும் வலிமையான ஆண் வரையாட்டுடன் மட்டுமே பெண் வரையாடு ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் இணைசேரும். நவம்பர் முதல் பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலத்தில் குட்டி போடும். பெரும்பாலும் ஒரு குட்டியை மட்டுமே வரையாடு ஈன்றெடுக்கும். அத்தி பூத்தாற்போல் ஏதாவது ஒரு பெண் வரையாடு 2 குட்டிகளை ஈன்றெடுக்கும்.

அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே மேய்ச்சலுக்கு செல்லும். பகல் வேளையில் பாறை இடுக்குகளில் ஓய்வெடுத்துக்கொள்ளும். அப்போது கூட்டத்தில் பெண் ஆடு உயரமான இடத்தில் நின்று மற்ற ஆடுகளுக்கு காவலாக இருக்கும். அதன் கூரிய பார்வை மூலமாக எதிரிகளை தூரத்தில் வரும் போதே அடையாளம் கண்டுபிடித்து விடும்.

ஆபத்து ஏதேனும் ஏற்பட்டால் அது ஒலி எழுப்பி மற்ற ஆடுகளை காப்பாற்றி கொண்டு ஓடி விடும். வரையாடுகள் புலி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட மாமிச உண்ணிகளின் விருப்ப உணவாகும். இதன் காரணமாக அவற்றால் ஓரிடத்தில் நிலையாக வாழவும் முடியாது. நிம்மதியாக உறங்கவும் முடியாது. எந்த நேரத்திலும் அதன் உயிருக்கு ஆபத்து நேரிடும்.

இதனால் வரையாடுகளின் வாழ்க்கை பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் போராட்டம் நிறைந்ததாகவே உள்ளது. இதன் காரணமாக அதன் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அழிந்து வரும் விலங்கினங்களின் பட்டியலில் உள்ளது. தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வசித்து வருகிறது. இதன் எண்ணிக்கை ஒரு சில நூறுகளில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாநில விலங்கான அதன் எண்ணிக்கை முழுவதுமாக அழிந்து விடுவதுடன் பாடப்புத்தகத்தில் மட்டுமே வரையாடுகளை காணக்கூடிய சூழல் உருவாகி விடும். மான்கள் மற்றும் வரையாடுகளின் எண்ணிக்கை குறைவதால் மாமிச உண்ணிகளும் உணவுக்காக இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.

இதனால் தமிழக வனப்பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து விடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகள் இல்லாத வனம் இருந்தும் பயனில்லை. இதனால் தமிழக வனப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியை உருவாக்கி வரையாடுகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி தரவேண்டும். இதற்காக வனப்பகுதியில் அதிகளவு மரங்களை நடவு செய்ய வேண்டும் என்பது வனஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்