உடுமலை அருகே முயல் வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
உடுமலை அருகே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் முயல் வேட்டையாடிய 4 பேருக்கு வனத்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தளி,
உடுமலை அருகே உள்ள வனப்பகுதியை வாழ்விடமாகக் கொண்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றுள் மயில், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்டவை வறட்சி காலத்தில் வனப்பகுதியில் இருந்து சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன.
காலப்போக்கில் சமவெளிப்பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் மறைவிடங்கள் அதன் வாழ்விடமாக மாறியது. அந்த வகையில் உடுமலை பகுதியில் மயில், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்டவை ஆங்காங்கே வயல்வெளிகளில் வசித்து வருகிறது.
இந்த நிலையில் உடுமலை தாலுகாவிற்கு உட்பட்ட பெதப்பம்பட்டி பகுதியில் முயல்கள் வேட்டையாடப்படுவதாக உடுமலை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெதப்பம்பட்டி பகுதியில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்துமாறு வனத்துறையினருக்கு வனச்சரக அலுவலர் தனபாலன் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து வனத்துறையினர் நேற்று பெதப்பம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள வயல்வெளியில் 4 பேர் வலை விரித்து காட்டுமுயல்களை வேட்டையாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் அவர்கள் 4 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் உடுமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் அடிவெள்ளியை சேர்ந்த மாரப்பன்(வயது 31), முத்துச்சாமி(30), ராஜூ (33), உடுமலை அடுத்த ஜல்லிபட்டி அருகே உள்ள ஓனாக்கல்லூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ்(36) ஆகியோர் என்பது தெரியவந்தது. அத்துடன் அவர்கள் முயல்களை வேட்டையாடியதை ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் தலா ரூ.5 ஆயிரம் வீதம் 4 பேருக்கும் சேர்த்து ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.