ஊரடங்கு கடுமையாக அமல்: தூத்துக்குடியில் முக்கிய சாலைகள் மூடப்பட்டன
தூத்துக்குடியில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் வகையில் முக்கிய சாலைகள் மூடப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடங்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 26 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 23 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக தூத்துக்குடி போல்டன்புரம், ராமசாமிபுரம் பகுதியில் மொத்தம் 11 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு தெருக்கள் முழுவதும் இரும்பு தகரங்களால் அடைக்கப்பட்டு உள்ளன. மேலும் முக்கிய சாலையான திருச்செந்தூர் ரோடு ஏற்கனவே மூடப்பட்டு இருந்தது.
சிவப்பு மண்டலம்
இதனால் மக்கள் தாமோதரநகர், வி.இ. ரோடு வழியாகவும், பிரையண்ட்நகர் வழியாகவும் சென்று வந்தனர். இந்த பகுதிகளில் தொடர்ந்து போக்குவரத்தை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனாலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டமாக அடையாளம் காணப்பட்டு சிவப்பு மண்டலத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் ஊரடரங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முக்கிய சாலைகள் மூடப்பட்டன
அதன்படி நேற்று பிரையண்ட்நகர், தாமோதரநகர், வி.இ.ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டன. அந்த பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டி இருப்பதால், அருகில் உள்ள சிறிய கடைகளிலேயே பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஆகையால் மக்கள் நடமாட்டம் குறைய தொடங்கி உள்ளது.