ஊரடங்கால், கோவிலில் இருந்து வெளியேற்றம்: உணவின்றி தவித்து வரும் ஆதரவற்றோர்-மாற்றுத்திறனாளிகள்
ஊரடங்கால், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உணவின்றி தவித்து வருகின்றனர். .
சாலியமங்கலம்,
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே கூட்டம் கூடுவதை தடுக்க அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இதையடுத்து கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது. ஆனால் பக்தர்கள் இன்றி தினமும் பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றன.
இந்த கோவில் நுழைவு பகுதியில் உள்ள மண்டபத்தில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் என 200 பேர் தங்கி இருந்தனர். இவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழங்கும் உணவு மற்றும் கோவிலில் வழங்கப்படும் உணவு ஆகியவற்றை வாங்கி அன்றாடம் சாப்பிட்டு வந்தனர். ஊரடங்கு அமலினால் கோவில் நடை சாத்தப்பட்டதையடுத்து இவர்கள் 200 பேரும் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து தாங்கள் எங்கு செல்வது? என வழி தெரியாமல் தவித்த அவர்கள் கோவிலுக்கு அருகே உள்ள தெப்பக்குளம், வெளி பிரகாரம், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்து கொண்டு இருக்கும் இவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்க கூட ஆட்கள் இல்லை.
அந்த வழியாக செல்லும் சமூக ஆர்வலர்கள் வழங்க கூடிய உணவு இங்கு இருக்கும் 10 பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. மற்றவர்கள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். தங்களுக்கு யாராவது ஒரு வேளை உணவு தருவார்களா? என்ற ஏக்கத்துடன் இவர்கள் காத்திருக்கின்றனர்.
வெறிச்சோடி கிடக்கும் கடைவீதியில் உணவுக்காக காத்திருக்கும் தங்களுக்கு யாரேனும் உதவிக்கரம் நீட்டுவார்களா? என பசியின் ஏக்கத்தோடு இவர்கள் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு போதுமான உணவு கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.