ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
ஊரடங்கால் வேலை இல்லாததால் குடும்பத்தை நடத்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
புதுச்சேரி,
புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 12-ந் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் இங்கு புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க ஆசாமி ஒருவர் முயன்றார். ஆனால் அந்த முயற்சி பலிக்காமல் போனதால் அதில் இருந்த பணம் தப்பியது. மறுநாள் இதுகுறித்து தெரியவந்ததும் வங்கி உதவி பொதுமேலாளர் அமுதா புகார் அளித்ததன்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற ஆசாமியை அடையாளம் காண்பதற்காக அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தததில் மங்கி குல்லா அணிந்து முகத்தை முழுவதுமாக மூடி இருந்தது தெரியவந்தது. இதனால் அவரை கண்டுபிடிப்பதில் போலீசுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அனைத்து கேமராக்களையும் ஆய்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஊரடங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரியகடை போலீசார் சந்தேகத்தின்பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர், விழுப்புரம் அதிச்சனூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சேகர் என்பவருடைய மகன் பிரபு என்கிற அப்பு (வயது 24) என்பதும், புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள ஜூஸ் கடையில் வேலை பார்த்ததும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர் வேலையில்லாமல் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்தார். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பிரபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதற்காக வைத்திருந்த கத்தி, இரும்பு கம்பி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட பிரபு போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களாக வேலையில்லை. இதனால் பணமின்றி குடும்பத்தை நடத்த சிரமமாக இருந்தது. எனவே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். இதற்காக இணையதளத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை எப்படி கொள்ளையடிப்பது? என்பது பற்றி தெரிந்துகொண்டேன். சம்பவத்தன்று சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றேன். ஆனால் பணம் வைக்கப்பட்டிருந்த அறையை திறக்க முடியவில்லை. எனவே அங்கிருந்து நான் வெளியேறிவிட்டேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமரன், முருகன், குற்றப்பிரிவு உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமலிங்கம், முகுந்தன், சத்தியராஜ், போலீசார் பிரபாகரன், அம்பேத்கர், சுனோஜ், லட்சுமிகாந்தன், ஜெகதீசன் ஆகியோரை கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் வெகுவாக பாராட்டினார்.