கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த அரியாங்குப்பம் சொர்ணாநகரில் கட்டுப்பாடுகள் தளர்வு

கொரோனா நோயால் சீல் வைக்கப்பட்ட அரியாங்குப்பம் சொர்ணா நகரில் கட்டுப்பாடுகள் நேற்று தளர்த்தப்பட்டது.

Update: 2020-04-16 08:25 GMT
அரியாங்குப்பம்,

புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியில் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு கடந்த 14 நாட்களாக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக சொர்ணா நகர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சொர்ணா நகர் பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அப்பகுதியில் உள்ளவர்கள் சகஜ நிலைக்கு திரும்புவார்கள் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 14 நாட்களுக்குப் பின் நேற்று காலை 9 மணிக்கு சொர்ணா நகர் பகுதியில் தடுப்புகள் அகற்றப்பட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

அதன்படி சீல் வைக்கப்பட்ட பகுதியின் நுழைவு கேட்டை திறந்து ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தாசில்தார் ராஜேஷ்கண்ணா, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், அரியாங்குப்பம் நல வாழ்வு மைய மருத்துவ அதிகாரி தாரணி ஆகியோர் உள்ளே சென்றனர்.

இந்தநிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட அரை மணி நேரத்துக்குள் சொர்ணாநகர் தடுப்புகளை மீண்டும் மூட வேண்டும். அரசு ஆணை பிறப்பித்த பின்னரே நுழைவு கேட்டினை திறக்க வேண்டும் என சுகாதார துறை இயக்குனர் தெரிவித்தார். இதனால் அங்கு குழப்பமான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து துணை கலெக்டர் சுதாகர் அங்கு நேரில் வந்து ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ.வுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. கூறும்போது, சொர்ணாநகர் பகுதி மக்களுக்கும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு செல்லும். சில கட்டுப்பாடுகளுடன் வெளியே வந்து செல்லலாம். அவசர உதவிக்கு மருத்துவமனைக்கு பொதுமக்கள் வந்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அத்தியாவசிய பணிகளுக்காக செயல்படும் அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள் வேலைக்கு சென்று வரலாம்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்