நகரப் பகுதியில் நாராயணசாமி ஆய்வு - முகக்கவசம் அணிய பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்
புதுச்சேரி நகரப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி, முகக்கவசம் அணிய பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வங்கிகள் இயங்கி வருகின்றன. தற்போது வங்கிகளில் முதியோர் உதவித்தொகை மற்றும் கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வங்கிகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியில் என்.சி.சி. மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை காரில் சென்று நகரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் காத்திருந்த மக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் படி அறிவுறுத்தினார். சிலர் முகக்கவசம் அணியாமல் இருப்பதை கண்ட அவர், கண்டிப்பாக அதனை அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர்களுக்கு தன்னிடமிருந்த முகக் கவசங்களை கொடுத்து அதை அணிய செய்தார்.
மேலும் வங்கி வாசலில் முதியவர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அதனை கண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி முதியவர்களை நீண்ட நேரம் நிற்க வைக்கக்கூடாது என்றும் அவ்வாறு நிற்க நேர்ந்தால் அவர்களுக்கு இருக்கை வசதி செய்து தரவேண்டும் என்றும் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.