ராயனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவித்தொகை கேட்டு காத்திருந்த முதியவர்கள்

ராயனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவித்தொகை கேட்டு முதியவர்கள் காத்திருந்தனர்.

Update: 2020-04-16 04:41 GMT
கரூர்,

கரூர் அருகே உள்ள ராயனூர், ஒத்தையூர், பால்வார்பட்டி, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான முதியோர்கள் மற்றும் விதவை உதவித்தொகை பெறுபவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000 மாதமாதம் ராயனூர் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே வைத்து பாரதஸ்டேட் வங்கி ஊழியர்களால் வழங்கப்படுவது வழக்கம். இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவால், மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் உதவித் தொகையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை இந்த உதவித்தொகை வழங்கப்படவில்லை.

இதனால் உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும், மற்ற ஊர்களில் பணம் கொடுப்பது தெரிந்து அங்கு சென்றாலும் தங்களை திருப்பி அனுப்பி அலைக்கழிக்க வைப்பதாக கூறியும், மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த முதியவர்கள் ராயனூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சமூக இடைவெளி விட்டு அமர்ந்து காத்திருப்பில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களை வரவழைத்தனர். இதையடுத்து அலுவலர்கள் காத்திருப்பில் ஈடுபட்ட முதியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முதியவர்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அலுவலர்கள் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்