கொரோனா ஊரடங்கு முடிவதற்குள் மீன்பிடி தடை காலம் தொடங்கியது - மீனவர்கள் வேதனை
கொரோனா ஊரடங்கு முடிவதற்குள் மீன்பிடி தடை காலம் தொடங்கியது. இதனால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு கடந்த மாதம் 25-ந்தேதி முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். குமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் மாவட்டம் முழுவதும் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 48 கடற்கரை கிராமங்கள் உள்ளன. மீன்பிடி தொழிலையே நம்பி உள்ள மீனவர்கள் தற்போது மீன்பிடிக்க செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். அந்த வகையில் லட்சக்கணக்கான மீனவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகம், குளச்சல் துறைமுகம், தேங்காப்பட்டணம் துறைமுகம் போன்ற முக்கிய துறைமுகங்கள் உள்ளன. இது போக முட்டம் போன்ற தனியார் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டும் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது.
சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து 350 விசைப்படகுகள், 70-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தார்கள். இங்குள்ள விசைப்படகு மீனவர்கள் 48 மணி நேரம் கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மீன்பிடி தொழில் முடங்கி உள்ளதால், தினமும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வீட்டிலேயே உள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு நேற்று முன்தினம் முடிவடைந்தது. அதை தொடர்ந்து நேற்று முதல் மே 3-ந்தேதி வரை 19 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் செய்வதறியாது திணறி வருகிறார்கள்.
மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு முடிவடையாத நிலையில், மீன்பிடி தடை காலமும் வந்து விட்டது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறித்து இனபெருக்கம் செய்யும் காலம் ஆகும்.
இந்த காலத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றால், மீன்இனம் அடியோடுஅழிந்துவிடும் என்று கருதி ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் ஆழ்கடலில்சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் நேற்று தொடங்கியது. இந்த தடைகாலம் ஜூன்மாதம் 15-ந்தேதி வரை 62 நாட்கள் அமலில் இருக்கும். இதனால் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாககொண்டு மீன்பிடிதொழிலில் ஈடுபட்டு வருகின்ற 350 விசைப்படகுகளும் துறைமுகத்திலேயே நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வள்ளம் ,கட்டுமரம் மற்றும் நாட்டு படகுகளுக்கு பொருந்தாது. இந்த தடை காலங்களில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் மீன்பிடிக்க செல்லாததால், வருமானம் இல்லாமல் இருக்கும் மீனவர்கள், குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வரும் அவர்களுக்கு இந்த மீன்பிடி தடை காலம் மேலும் ஒரு சுமையாக அமைந்து உள்ளது என்றே விசைப்படகு மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.