திருப்பத்தூரில் வியாபாரிகள் காய்கறி, மளிகைப்பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் - கலெக்டர் தகவல்
திருப்பத்தூரில் வியாபாரிகள் காய்கறி, மளிகைப் பொருட்களை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என கலெக்டர் கூறினார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் மளிகை சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள், காய்கறி, இறைச்சி, மருந்துக்கடை உள்ளிட்ட அனைத்து வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது:-
திருப்பத்தூர் நகர பகுதிக்கு தினமும் பலர் தங்களின் மோட்டார்சைக்கிள்களில் பல்வேறு தேவைகளுக்காக வருகிறார்கள். விரைவில் திருப்பத்தூர் நகர பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட உள்ளது. திருப்பத்தூரில் வியாபாரிகள் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகிய அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்.
இதற்காக திருப்பத்தூர் தாசில்தார் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விண்ணப்பங்கள் தர வேண்டும். மினி லாரியில் மளிகைப் பொருட்கள் பாக்கெட்டுகளாக கொண்டு சென்று பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை குடிநீர், சுகாதார பணிகள், நகராட்சி, காவல்துறை, மருத்துவ உதவி ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள செல்போன் எண் வழங்கப்படும்.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. அவசியமான பணிக்காக வெளியில் வரும்போது முகக் கவசம் அணிந்து வரவேண்டும். வீட்டில் உள்ள 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பேசியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். இதற்காக போலீசார், மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வாகனங்கள் செல்லாதவாறு சாலையின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 4 ஆயிரத்து 500 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள் வெளியில் வரும்போது முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தாசில்தார் அனந்த கிருஷ்ணன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள், அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.