டெல்லி மாநாட்டில் பங்கேற்பு: தேனியில் மேலும் ஒருவருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தேனியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-15 22:00 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் மொத்தம் 40 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் போடியை சேர்ந்த ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 39 பேரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 22 பேர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள். மற்றவர்கள் அவர்களின் குடும்பத்தினர் ஆவார்கள்.

இவர்கள் தவிர, டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பிய தேனி அல்லிநகரத்தை சேர்ந்த 45 வயதுடையவர் உள்பட மேலும் 6 பேர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்களின் உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இதில் தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவருக்கு கடந்த 1-ந்தேதி நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்று 2-வது முறையாக நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், தேனி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்து பேசிய நபர்கள், அவர்களின் வீடுகளுக்கு வந்து சென்ற உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மருத்துவமனைக்கு சளி, காய்ச்சல், இருமலுடன் வரும் நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 306 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவில் அவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்று தெரியவரும்.

மேலும் செய்திகள்