ஊரடங்கு உத்தரவால் விற்பனை பாதிப்பு: டிராக்டர் மூலம் உழவு செய்து பூச்செடிகளை அழிக்கும் பரிதாபம்

ஊரடங்கு உத்தரவால் விற்பனை பாதிக்கப்பட்டதால் டிராக்டர் மூலம் உழவு செய்து பூச்செடிகளை விவசாயிகள் அழித்து வருகின்றனர்.;

Update: 2020-04-15 22:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் காய்கறிகளுக்கு அடுத்தப்படியாக பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் மல்லிகை, செண்டுமல்லி, செவ்வந்தி, கோழிக்கொண்டை, காக்கரட்டான், அரளி, ரோஜா, கனகாம்பரம் உள்பட அனைத்து வகையான பூக்களும் பயிரிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய 2 இடங்களில் பூ மார்க்கெட்டுகள் செயல்படுகின்றன. மாவட்டம் முழுவதும் பறிக்கப்படும் பூக்கள் அந்த மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த மார்க்கெட்டுகளில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கேரளாவில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்கு திண்டுக்கல்லில் இருந்து பூக்கள் அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் ஓணம் பண்டிகை காலத்தில் தினமும் 30 டன் பூக்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதற்காக கேரளாவில் இருந்து வியாபாரிகள் நேரில் வருவதும் உண்டு.

மேலும் கோவில் திருவிழா, பண்டிகை காலங்களில் பூக்களின் விற்பனை களைகட்டும். இதனால் பூக்களுக்கு எப்போதும் கணிசமான விலை கிடைக்கும். இதனால் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் பூ விவசாயத்தில் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர். எனவே, ஏ.வெள்ளோடு, கல்லுப்பட்டி, சிலுவத்தூர், கம்பிளியம்பட்டி, நிலக்கோட்டை, நத்தம், செந்துறை, கன்னிவாடி, நரசிங்கபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோவில் திருவிழாக்கள், திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இதனால் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் நாடு முழுவதும் அனைத்து கோவில்களும் பூட்டப்பட்டன. மேலும் மக்கள் வெளியே நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டன. ஊரடங்கு காலத்தில் நடந்த திருமணத்திலும் குறைவான நபர்களை பங்கேற்றனர். இது பூக்களின் விற்பனையை கடுமையாக பாதித்தது. எனவே, ஊரடங்கு விலக்கப்பட்டதும் பூக்களை விற்பனை செய்யலாம் என்று விவசாயிகள் நினைத்தனர்.

இதற்காக பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவைத்தனர். இதற்கிடையே ஊரடங்கு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் பூக்களை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு விலக்கப்படும் போது பெரும்பாலான பூக்கள் செடிகளிலேயே வாடிவிடும் வாய்ப்பு உள்ளது. கோடையில் தண்ணீர் கிடைக்காமலும் செடிகளும் கருகிவிடும் வாய்ப்பு உள்ளது.

இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். இதையடுத்து ஒருசில விவசாயிகள் வேறுவழியின்றி பூச்செடிகளை மாடுகளை மேயவிட்டு வருகின்றனர். சிலர் பூக்களை மட்டும் பறித்து கால்நடைகளுக்கு தீவனமாக இடுகின்றனர். மேலும் சில விவசாயிகள் பயன்படாத பூச்செடிகளை எதற்காக, வளர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் அழித்து வருகின்றனர்.

அதிலும் டிராக்டர் மூலம் உழவு செய்து பூச்செடிகளை அழிப்பது பெரும் பரிதாபமாக உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் பூச்செடிகளை பயிரிட்ட விவசாயிகள் பெருமளவில் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்