சேலம் அருகே தீயில் எரிந்து 30 குடிசைகள் சேதம் - 3 பேர் படுகாயம்

சேலம் அருகே தீயில் எரிந்து 30 குடிசைகள் சேதம் அடைந்தன. 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-04-15 22:30 GMT
அயோத்தியாப்பட்டணம், 

சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் அட்டக்கரடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன. இந்த குடிசைகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் அந்த பகுதியில் உள்ள யுவராஜ் என்ற கூலித்தொழிலாளியின் குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக அடித்ததால் அந்த தீ மளமளவென அக்கம், பக்கத்து குடிசைகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதையடுத்து பொதுமக்கள் வீடுகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி வெளியே கொண்டு வந்தனர். அப்போது ஒரு வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அந்த வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவத்தில் 30 குடிசைகள் எரிந்து சேதம் அடைந்தன. இதற்கிடையில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாழப்பாடி மற்றும் சேலம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.

இந்த சம்பவத்தில் யுவராஜ் (வயது 26), தனியரசு (28), ஹரி (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உமாராணி மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்று விசாரணை நடத்தினர்.

மின்கசிவால் ஏற்பட்டதா? அல்லது குடிசை வீடுகளின் அருகில் உள்ள குப்பை மேட்டில் யாராவது சிகரெட் குடித்து விட்டு சரியாக அணைக்காமல் போட்டதால், தீ குடிசைகளுக்கு பரவியதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்