பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5,591 பேர் கைது - 4,528 வாகனங்கள் பறிமுதல்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த 5,591 பேரை கைது செய்த போலீசார் 4,528 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2020-04-15 21:30 GMT
அரியலூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் சாந்தா தலைமையிலும், அரியலூர் மாவட்டத்தில் கலெக்டர் ரத்னா தலைமையிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையிலும், அரியலூர் மாவட்டத்தில் சீனிவாசன் தலைமையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே அரசு அறிவித்த நேரத்துக்கு பிறகும், சாலையில் தேவையில்லாமல் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்து, கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நேற்று மாலை 5 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவினை மீறி வீட்டை விட்டு தேவையில்லாமல் சுற்றித்திரிந்ததாக மொத்தம் 2,093 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 2,224 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். மேலும் 1,380 இருசக்கர வாகனங்களும், 72 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று மதியம் 2 மணி வரை வீட்டை விட்டு தேவையில்லாமல் சுற்றத்திரிந்தாக மொத்தம் 3,336 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 3,367 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். மேலும் 3,008 இருசக்கர வாகனங்களும், 68 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்