கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசின் வழிகாட்டுதல் குறித்து எடியூரப்பா அவசர ஆலோசனை - துணை முதல்-மந்திரிகள் பங்கேற்றனர்
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரிகள் மற்றும் மந்திரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் 20-ந் தேதிக்கு பிறகு சில முக்கியமான தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கி மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் மந்திரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் தனது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், மீன்வளம், அறநிலையத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீவிரமாக அமல்படுத்த...
இதில் சில தொழில்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் பேசிய எடியூரப்பா, ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று மந்திரி பசவராஜ் பொம்மைக்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய எடியூரப்பா, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்துவது குறித்து மே மாதம் 3-ந் தேதிக்கு பிறகு நிலைமையை ஆய்வு செய்து முடிவு எடுக்கலாம். மதுபான விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று கூறினார்.
மேலும் வருகிற 20-ந் தேதி மீண்டும் கூடி ஆலோசித்து, எந்தெந்த தொழில்களுக்கு விலக்கு அளிப்பது என்று முடிவு எடுக்கலாம் என்று எடியூரப்பா தெரிவித்தார்.