கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
“பிரதமர் ஊரடங்கு உத்தரவை வருகிற 3-ந் தேதி வரை நீட்டித்துள்ளார். அதுவரை நாங்கள் கஷ்டப்பட்டு தாக்குப்பிடிக்கிறோம். அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம். இதில் நாங்கள் அரசியல் செய்யமாட்டோம். அரசு வெளிப்படையாக, பாரபட்சமற்ற முறையில் செயல்பட வேண்டும்.
ஆனால் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம், நிவாரணம் வழங்குவதில் அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது. இதுகுறித்து நாங்கள் முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம். வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள கர்நாடக தொழிலாளர்களை அழைத்து வர முதல்-மந்திரி எடியூரப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு மவுனம் காப்பது சரியல்ல.
ரத்த தானம்
சில பா.ஜனதா தலைவர்கள் இஷ்டம் போல் பேசுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தினரை துப்பாக்கியால் சுட வேண்டும் என்று சிலர் கூறினர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?. போலீஸ் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?. அவர்கள் தாமாகவே வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?. அரசு என்ன சொல்கிறதோ அதன்படி அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.
அனைவரும் ரத்த தானம் செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். அதன்படி எங்கள் கட்சியை சேர்ந்த மாணவர் அமைப்பினர், ரத்த தான முகாம் ஏற்பாடு செய்து, ரத்த தானம் பெறுகிறார்கள். இது பாராட்டுக்குரியது.”
இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.