தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது; பைபர் படகுகளில் மட்டும் மீன்பிடிக்க அனுமதி - காசிமேடு மீன்பிடி துறைமுக உதவி இயக்குனர் தகவல்
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. எனவே விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது. பைபர் படகுகளில் மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக காசிமேடு மீன்பிடி துறைமுக உதவி இயக்குனர் தெரிவித்தார்.
திருவொற்றியூர்,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லவில்லை. ஏற்கனவே கடலுக்குள் சென்று படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக பொதுமக்கள் மீன்கள் வாங்கியதால் மீன் மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் பைபர் படகு மீனவர்கள் மட்டும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லலாம் என அரசு அறிவித்தது.
இந்த நிலையில் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தயாரான மீனவர்களை தடுத்த போலீசார், மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்தனர். கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவும் தடை விதித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பைபர் படகு மீனவர்கள், காசிமேட்டில் உள்ள உதவி மீன்பிடி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அப்புறப்படுத்தினர்.
இதுதொடர்பாக சென்னை ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன், காசிமேடு மீன்பிடி துறைமுக உதவி இயக்குனர் வேலன், பைபர் படகு உரிமையாளர் சங்கத்தினர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மீனவர்களின் கருத்துகளை கேட்ட மீன்வளத்துறை அதிகாரிகள், பைபர் மீன்பிடித்தொழில்களுக்கு அனுமதி அளித்தனர்.
பின்னர் இதுதொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுக உதவி இயக்குனர் வேலன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பைபர் படகுகளுக்கு அனுமதி
தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் விசைப்படகுகளில் சென்று கடலில் மீன்பிடிக்க அனுமதி இல்லை. தினமும் சுழற்சி முறையில் குறித்த அளவு பைபர் படகுகள் மட்டும் மீன்பிடிக்க கடலுக்குள் சென்று வரலாம். கடலுக்குள்ளும் மீனவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
காசிமேடு மீன் சந்தையில் சில்லரை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பைபர் படகுகளில் பிடித்து வரும் மீன்களை மொத்த விற்பனை மட்டுமே செய்ய வேண்டும். சில்லரை விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை மீனவர்கள் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.