முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் வாகனம் பறிமுதல் - சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
சென்னையில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் இதை மதிக்காமல் அலட்சியமாக பொது இடங்களில் சுற்றித்திரிகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று, பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து எளிதாக சமூகத்தில் பரவும் அபாயம் உள்ளது.
இந்தநிலையில் இதன் வீரியத்தை உணர்ந்து கோவை மற்றும் திருப்பூரில் முக கவசம் அணிவது கட்டாயம் என்று கடந்த செவ்வாய்க்கிழமை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து சென்னையிலும் வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டார்.
முக கவசம் அணியவில்லை என்றால், அவர்கள் வெளியே செல்வதற்காக வழங்கப்பட்ட ‘பாஸ்’ ரத்து செய்யப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். ஆனாலும் பொதுமக்கள் இந்த உத்தரவுகளை கடைப்பிடிக்காமல் வாகனங்களில் பொது வெளியில் உலா வந்து கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் முக கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பதுடன், அவர்கள் ஓட்டி வரும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் பரவலை தடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி தொற்று நோய் தடுப்பு சட்டம் 1897 பிரிவு 2-ன் கீழ் மாநகராட்சி அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து பொதுமக்களும் வெளியே வரும் போது, முக கவசம் அணிந்து வர வேண்டும்.
இந்த உத்தரவை மீறி, வெளியே வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, போலீசார் மூலம் அவர்கள் பயணம் செய்யும் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும், அவர்களின் ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்படும். முக கவசம் அணியாமல் வெளியே நடந்து செல்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.