கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செல்வதை போலீசார் தடுத்ததால் காய்கறிகளை கீழே கொட்டிய விவசாயி
கோயம்பேடு மார்க்கெட் செல்வதை போலீசார் தடுத்ததால், விவசாயி காய்கறிகளை கீழே கொட்டினார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அகரம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). விவசாயியான இவர், கடந்த திங்கட்கிழமை காலை தனது மோட்டார் சைக்கிளில் காய்கறி மூட்டையை ஏற்றிக்கொண்டு தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை வழியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்றார்.
அப்போது வெங்கல் போலீசார் அவரை வழிமறித்து விசாரணை செய்தனர். காய்கறியை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எடுத்துச்செல்வதாக கூறிய பின்னரும் போலீசார் பல மணிநேரம் அவரை சாலை ஓரம் காத்திருக்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் போலீஸ் ஜீப்பை வழிமறித்த கார்த்திக், தான் ஒரு விவசாயி என்றும், தன்னை காய்கறி விற்பனை செய்ய செல்ல விடாமல் போலீசார் தடுத்து விட்டனர் என்று கூறி, திடீரென தான் கொண்டு வந்த மூட்டையில் இருந்த காய்கறிகளை சாலையில் கொட்டிவிட்டு கோபத்துடன் சென்றுவிட்டார்.
போலீஸ் சூப்பிரண்டு உதவி
இதையறிந்த திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் ஆகியோர் அகரம் கண்டியையில் உள்ள விவசாயி கார்த்திக் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர். பின்னர், இரண்டு 25 கிலோ அரிசி மூட்டைகள், காய்கறிகள் மற்றும் அப்துல் கலாமின் போதனைகளை விளக்கும் புத்தகம் ஆகியவற்றை அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு உதவியாக வழங்கினார்.