மதுரை சித்திரை திருவிழாவை நடத்தக்கோரி வழக்கு - அவசரமாக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு

சித்திரை திருவிழாவை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

Update: 2020-04-15 23:00 GMT
மதுரை, 

மதுரை இ.மா.கோபாலகிருஷ்ணகோன் அறக்கட்டளை நிர்வாகி அருண் போத்திராஜ். இவர் சார்பில் வக்கீல் எஸ்.எம்.ஏ.ஜின்னா மதுரை ஐகோர்ட்டில் அவசர மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:-

மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழா என்பது உலக பிரசித்தி பெற்றது. சித்திரை மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நடக்கும்.

அதேபோல சித்திரை மாதத்தில் அழகர்கோவிலில் 10 நாட்கள் திருவிழா நடக்கும். சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து வந்து மதுரை வைகை ஆற்றில் இறங்குவார். இந்த நிகழ்ச்சியை காண பல லட்சம் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவார்கள். இந்தநிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏற்பாடுகளுக்கான அறிவிப்பு எதுவும் வரவில்லை.

இதற்கான ஏற்பாடுகள் எதையும் அதிகாரிகள் செய்யாமல் உள்ளனர். எனவே வழக்கம் போல இந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் உள்பட சித்திரை திருவிழாவை நடத்த கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டு இருந்தது. ஆனால் இதனை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள மதுரை ஐகோர்ட்டு பதிவுத்துறை மறுத்துவிட்டது. மேலும் இந்த மனுவானது, கோர்ட்டின் வழக்கமான பணி நாட்களின்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்