கண்மாய் மீன்களுக்கு கடும் கிராக்கி; அயிரை கிலோ ரூ.1000-க்கு விற்பனை
கண்மாய் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அயிரை மீன் கிலோ ரூ.1000 வரை விற்பனையாகிறது.
மதுரை,
கொரோனா வைரஸ் பரவுவதால் கடந்த 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. எந்த தொழிலும் நடக்கவில்லை. மதுரை நகருக்குள் இறைச்சிக்கடை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடல் மீன்களும் பெருமளவில் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். பொழுதை எப்படி கழிப்பது என்பதிலும் பலருக்கு குழப்பம். இந்தநிலையில் ருசியான உணவுகளையாவது சமைத்து உண்போம் என்று ஆர்வப்படுகின்றனர். ஆனால் தினமும் சைவ உணவுகளை ருசிக்கவும் மனம் வரவில்லை.
எனவே கண்மாய்களில் தற்போது மீன்பிடிக்கும் நேரம் என்பதால் கிராம மக்களும், நகரவாசிகளும் கண்மாய்களை நோக்கி படையெடுக்கின்றனர். அதிகாலை நேரங்களில் கண்மாயில் பிடிக்கும் மீன்களுக்கு போட்டா போட்டி நிலவுகிறது. உயிருடன் கண்மாய் கரையிலேயே விற்கப்படும் மீன்களை கிலோ கணக்கில் வாங்கி வீட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.
கட்லா, ரோகு, கெண்டை போன்ற வகை மீன்கள் கிலோ ரூ.200 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. விரால் மீன் ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.1,000 வரை விலை போகின்றன. அயிரை மீன் ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தும் வாங்குகின்றனர்.
இதுகுறித்து பூதகுடி லட்சுமிபுரத்தை சேர்ந்த தனபாலன் என்பவர் கூறியதாவது:-
கடந்த சில வாரங்களாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிட இதுதான் சரியான நேரம் என நினைக்கின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் அனைவரின் விருப்பமும் கண்மாய் மீன்களை நோக்கி நகர்ந்துள்ளது.
பொதுவாக கிராமங்களில் உள்ள கண்மாய்களை குத்தகைக்கு எடுத்து மீன் குஞ்சுகளை வளர்ப்பார்கள். ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் தான் மீன்களை பிடிப்பார்கள். தற்போது மீன்பிடி காலம் என்பதால் ஒவ்வொரு கிராம கண்மாயிலும் பிடிக்கும் மீன்களை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை சமாளிக்க குத்தகைதாரர்கள் நள்ளிரவில் மீன் பிடிக்கின்றனர்.
இதையறிந்த மக்கள், நள்ளிரவிலும் கண்மாய்களை முற்றுகையிட்டு குத்தகைதாரர்களை திக்குமுக்காட வைக்கின்றனர். வழக்கமாக ரூ.150-க்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளுக்கு தற்போது இருமடங்கு விலை அதிகரித்து உள்ளது. ஆனாலும் யாரும் கவலைப்படவில்லை.
ஏனென்றால் தற்போது ஆரோக்கியமான உணவாக கண்மாய் மீன்கள் இருக்கின்றன. இன்னும் சில வாரங்கள் மட்டுமே கண்மாய் மீன்கள் கிடைக்கும். பின்னர் அடுத்த ஆண்டு தான் சீசன். எனவே மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கண்மாய் மீன்களுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.