வாகன அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க அறிவிப்பு
வாகன அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்து வருகிறார்கள். இருப்பினும் இறப்பு, திருமணம் மற்றும் மருத்துவ தேவைக்காக வெளியூர் செல்ல வேண்டியவர்களுக்கு வாகன அனுமதி திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
வாகன அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு நாளுக்கு நாள் அதிகம் பேர் வருவதால் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்திருந்தார். இருப்பினும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை 100-க்கும் மேற்பட்டவர்கள் வாகன அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வந்திருந்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் அவர்களை வரிசையில் நிறுத்தி வாகன அனுமதிக்கு விண்ணப்பிக்க அனுப்பிவைத்தனர். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் தனிதாசில்தார்கள் 2 பேர் இதற்காக நியமிக்கப்பட்டு வாகன அனுமதி விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை செய்து கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு அனுப்பிவைத்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வேறு வழியின்றி ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி வாகன அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் வருவதை தவிர்த்து pa-g-en.tntpr@gm-a-il.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் https://tiru-p-pur.nic.in என்ற திருப்பூர் மாவட்ட இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பித்து வாகன அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.