தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 26 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 20 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். 5 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இதில் காயல்பட்டினத்தை சேர்ந்த 2 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். அவர்கள் கடந்த மாதம் 30-ந்தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 1-ந் தேதி அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் 2 பேரையும் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மெல்ல மெல்ல குணமடைந்தனர்.
அவர்களுக்கு தொடர்ச்சியாக 2 பரிசோதனைகள் நடத்தப்பட்டதில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமானது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 பேரும் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பழங்களை வழங்கினார்.
கலெக்டர் வழியனுப்பினார்
மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, அரசு ஆஸ்பத்திரி டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் அதிகாரிகள் அவர்கள் 2 பேரையும் வழியனுப்பி வைத்தனர். மேலும் 2 வாரங்களுக்கு 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.