நெல்லை மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகங்கள், ரேஷன் கடைகளில் சிறப்பு அதிகாரி கருணாகரன் ஆய்வு
நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள அம்மா உணவகங்கள், ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி கருணாகரன் ஆய்வு நடத்தினார்.
நெல்லை,
நெல்லை தச்சநல்லூர் மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அம்மா உணவகங்களில் நெல்லை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு அதிகாரி கருணாகரன் நேற்று ஆய்வு செய்தார். அம்மா உணவகத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோருக்கு உரிய வெப்ப பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்க வேண்டும். மேலும், அரசு தெரிவித்துள்ளவாறு உரிய முக கவசங்கள் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அம்மா உணவகத்தில் நுழைவதற்கு முன்பு சோப்பு அல்லது சுத்திகரிப்பான் மூலம் கைகளை சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து தச்சநல்லூர், பாளையங்கோட்டையில் உள்ள ரேஷன் கடைகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது கொரோனா நிவாரண நிதி ரூ.1000-ம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து மீதமுள்ள சில நபர்களுக்கு உடனடியாக வழங்கிட உத்தரவிட்டார். மேலும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, சீனி, துவரம் பருப்பு மற்றும் கோதுமை ஆகியவை முறையாக வழங்கப்பட்டுள்ளதா, போதிய இருப்பு உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
விலைப்பட்டியல்
பாளையங்கோட்டையில் உள்ள தற்காலிக காய்கறி சந்தைகளை ஆய்வு செய்தார். காய்கறி சந்தையில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் குளோரின் அளவினை தினந்தோறும் ஆய்வு செய்யுமாறும், பொதுமக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றுமாறும், மாநகராட்சி ஆணையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் சீரான விலையில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக விலைப்புள்ளிகளை அறிவிப்பு பலகையில் பொதுமக்களுக்கு தெரியுமாறு வைத்திருக்கவும், விலைப்புள்ளியில் உள்ள விலையை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டது.
தாழையூத்தில் இயங்கி வருகின்ற நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தாலுகாக்களுக்கான கிட்டங்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு கிட்டங்கியில் அரிசி, சீனி, துவரம் பருப்பு மற்றும் கோதுமை ஆகியவற்றின் இருப்பு குறைந்த அளவில் காணப்பட்டது. எனவே, அத்தியாவசிய பொருட்கள் இருப்பினை ஒரு மாதத்திற்கு போதிய அளவில் இருப்பு வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு தேவையான முக கவசங்கள் வழங்கவும், கை சுத்திகரிப்பான் வைத்திருக்கவும், பணியாளர்கள் சமூக இடைவெளியினை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் நடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.