புளியங்குடியில் டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு - பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை கண்டறிய நடவடிக்கை

புளியங்குடியில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை கண்டறிய போலீசார் டிரோன் கேமரா மூலம் புளியங்குடி நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.;

Update: 2020-04-15 22:15 GMT
புளியங்குடி, 

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புளியங்குடி நகர் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு நகர எல்லைகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து தெருக்களும் கட்டைகளை கொண்டு மூடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மக்கள் தெருக்களில் கூட்டமாக நின்று பேசுவதை தடுக்கவும், மொட்டை மாடியில் கூட்டமாக இருந்து அரட்டை அடிப்பதை தடுக்கவும் போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் மற்றும் போலீசார் நேற்று டிரோன் கேமரா மூலம் புளியங்குடி முழுவதும் கண்காணித்தனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதிகள் மற்றும் புளியங்குடியின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் யாரேனும் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்களா? மொட்டைமாடியில் கூட்டமாக இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்களா என்பதை டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். அப்போது மொட்டை மாடிகளிலும், பொது இடங்களிலும் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களை போலீசார் அழைத்து எச்சரித்தனர். தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்