நெல்லை மாநகரில் நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
நெல்லை மாநகரில் கிருமி நாசினி தெளிக்க நவீன எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. நேற்று அந்த எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாநகரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகர் முழுவதும் தெருக்கள் மற்றும் வீடு, வீடாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. தினமும் காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் கைப்பம்புகள் மூலமாகவும் பல்வேறு உபகரணங்கள் மூலமாகவும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
இந்த பணிக்கு சமீபத்தில் பரவலாக நீண்ட தூரத்துக்கு தெளிக்கும் நவீன டிராக்டர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
நவீன எந்திரங்கள்
இந்த நிலையில் மத்திய அரசின் பெல் நிறுவனம் சார்பில் கூம்பு வடிவ கிருமி நாசினி தெளிப்பான் தயாரிக்கப்பட்டது. அதில் 4 எந்திரங்கள் நெல்லை மாநகருக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நவீன எந்திரத்தை தண்ணீர் தொட்டியுடன் இணைத்து அதில் கிருமி நாசினியை கலந்து வீதிகளில் மழை தூறல் போல் தெளிக்கிறார்கள். கூம்பு வடிவ நவீன எந்திரத்தின் உள்ளே இருக்கும் பெரிய விசிறி மூலம் காற்று வேகமாக தள்ளப்பட்டு கிருமி நாசினி பரவலாக தெளிக்கப்படுகிறது.
இதே போல் நவீன கிருமி நாசினி தெளிப்பான் பொருத்தப்பட்ட 10 பேட்டரி வாகனங்களும் நெல்லை மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த வாகனம் மூலம் சிறிய தெருக்களிலும் சென்று எளிதாகவும், வேகமாகவும் கிருமி நாசினி தெளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.