வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம் - கலெக்டர் அருண் உத்தரவு
வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கலெக்டர் அருண் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் இதுவரை 6 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் நலமுடன் உள்ளனர். இன்னும் சில நாட்களில் அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டு தொற்று இல்லை என்பது தெரியவந்தால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போர் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெற்று வருகின்றனர். அரசு வழங்கிய நிவாரண தொகை அவர்களுக்கு கிடைக்க உரிய ஏற்பாடு செய்யப்படும். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் முக கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தந்துள்ளனர். நம்மிடம் தேவையான மருத்துவ வசதி உள்ளது. வெண்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன.
எனவே யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என்பதை வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தை போல் நாம் கொரோனா பாதிப்புகளை பிரித்து பார்ப்பதில்லை. இருந்தபோதிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக 13 மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது மேலும் 8 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.
சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் கூறியதாவது:-
கடந்த 2-ந் தேதி முதல் இப்போது வரை 6 பேர் தான் சிகிச்சையில் உள்ளனர். நமக்கு தேவையான 35 வெண்டிலேட்டர்கள் வந்துள்ளன. மேலும் 25 வெண்டிலேட்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன. 120 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. வீடு, வீடாக சென்று இதுவரை 6 லட்சத்து 82 ஆயிரத்து 750 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி உள்ளோம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் சோதனை நடத்த உள்ளோம். 4,700 ரேப்பிட் கிட்டுகள் ஆர்டர் கொடுத்துள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் அவை வந்து சேரும்
இவ்வாறு மோகன்குமார் கூறினார்.