குளச்சலில், தடையை மீறி மீன்பிடித்தவர்களை போலீசார் விரட்டியதால் பரபரப்பு - கடலுக்குள் குதித்து தப்பினர்

குளச்சலில் தடையை மீறி மீன்பிடித்தவர்களை போலீசார் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கடலுக்குள் குதித்து போலீசாரிடம் சிக்காமல் தப்பினர்.

Update: 2020-04-15 08:17 GMT
குளச்சல், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலில் மீன் பிடிப்பதற்கும் அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குளச்சல் பகுதி விசைப்படகுகள், கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மார்க்கெட்டுகளில் மீன் வரத்து இல்லை. சில வியாபாரிகள் வைத்திருந்த கெட்டு போன மீன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதனால் மீன் பிரியர்களுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. அவர்கள் எங்கு மீன் கிடைக்கும் என்று அலைந்து திரிந்து வருகின்றனர்.

மீனவர்களுக்கு கூட உணவுக்கு மீன் கிடைக்காமல் அவர்கள் காய்கறிக்கு மாறி உள்ளனர். இந்த நிலையில் சுழற்சி முறையில் சில நிபந்தனைகளுடன் நாட்டு படகுகள் மட்டும் மீன் பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மீன் பிடிக்க செல்லாத கட்டு மர மீனவர்கள் தங்கள் கட்டுமரங்களை தயார் படுத்தி வருகின்றனர். ஆனால் தேதி விவரம் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே நேற்று காலை சில மீனவர்கள் தடையை மீறி கட்டுமரத்தில் மீன் பிடித்து விட்டு குளச்சலில் கரை திரும்பினர். மீனை வாங்குவதற்கு மீன் பிரியர்களும் திரண்டிருந்தனர். மீன்கள் ஏலம் விடப்பட்டன. அனைவரும் மீன் வாங்கிக்கொண்டிருந்தனர். இதுபற்றி தகவலறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை விரட்டினர். அப்போது மீனவர்கள் போலீசாரின் பிடியில் சிக்காமலிருக்க கடலில் குதித்தனர். மீன் வாங்க சென்றவர்கள் கலைந்து சென்றனர்.

ஆனால் போலீசார் கரையில் நின்றபடி கண்காணித்தனர். போலீசார் திரும்பி செல்லாததால் சுமார் 2½ மணிநேரம் மீனவர்கள் கடலில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளுக்கு பின்னால் மறைந்திருந்தனர்.

பின்னர் போலீசார் திரும்பி சென்றதும் மீனவர்கள் கரையேறி வீட்டுக்கு சென்றனர். இச்சம்பவம் குளச்சலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்