ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் விரக்தி: பூத்துக்குலுங்கிய செண்டுமல்லி செடிகளை வேரோடு பிடுங்கி வீசிய விவசாயிகள்
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் விரக்தியடைந்த விவசாயிகள் பூத்துக்குலுங்கிய செண்டுமல்லி செடிகளை வேரோடு பிடுங்கி வீசினர்.
தேனி,
தேனி மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, திராட்சை சாகுபடிக்கு அடுத்தபடியாக பூக்கள் சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பங்குனி, சித்திரை மாதங்களில் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடக்கும் என்பதாலும், தமிழ்ப்புத்தாண்டு மற்றும் கேரள மாநிலத்தில் சித்திரை முதல் நாளில் நடக்கும் சித்திரை விஷூ நிகழ்ச்சியை கருத்தில் கொண்டும் செண்டுமல்லி, சம்பங்கி பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி தேனி மாவட்டத்தில் தேனி, நாகலாபுரம், கொடுவிலார்பட்டி, வயல்பட்டி, திருமலாபுரம், பூமலைக்குண்டு, தர்மாபுரி, தப்புக்குண்டு, குச்சனூர், உப்புக்கோட்டை, மஞ்சிநாயக்கன்பட்டி, ராசிங்காபுரம், போடி, சீலையம்பட்டி, கோட்டூர் உள்பட பல்வேறு இடங்களிலும் பூக்கள் சாகுபடியில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டனர். அவ்வாறு சாகுபடி செய்த பகுதிகளில் இந்த ஆண்டு பூக்கள் விளைச்சல் அதிக அளவில் இருந்தது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
ஆனால், அந்த மகிழ்ச்சியை கொரோனா சுக்குநூறாய் நொறுக்கி விட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கேரளாவுக்கு பூக்கள் அனுப்பி வைப்பதும் நிறுத்தப்பட்டது. பூ மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. இதன் விளைவாக பூக்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் முடங்கினர். செடிகளில் பூக்களை பறிக்காமலேயே விட்டனர். வயல்பட்டி பகுதிகளில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் சாகுபடி செய்யப்பட்ட சம்பங்கி செடிகளில் பூக்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்கின.
இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால், அதன்பிறகு பூக்களை விற்பனை செய்யலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். இந்நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளதால், பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். தேனி கருவேல்நாயக்கன்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செண்டுமல்லி செடிகளை விவசாயிகள் ஆத்திரத்தில் நேற்று வேரோடு பிடுங்கி வீசினர். பூத்துக்குலுங்கிய செடிகள் வேரோடு பிடுங்கப்பட்டு வேலிகளிலும், சாலையோரமும் கிடந்தன. இதனால், பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.