விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகுப்பு - கலெக்டர் அண்ணாதுரை தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிற நிலையில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுனர் ஆகிய தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரண தொகுப்பு வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு அறிவித்த நிவாரண தொகுப்பான ரூ.1000 ரொக்கம், 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் அடங்கிய தொகுப்பு 29,677 தொழிலாளர்களுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் ரேஷன் கடைகளுக்கு மூலம் வழங்கப்படும். அவ்வாறு பெறப்படும் தொகுப்பிற்கு டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன் பெறும் தொழிலாளர்கள் அந்தந்த குறிப்பிட்ட நாட்களில் ரேஷன் கடைகளுக்கு சென்று உரிய நலவாரிய அட்டை, ஆதார் அட்டை காண்பித்து தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் ரேஷன் கடைகளில் போதிய சமூக இடைவெளியை கடை பிடித்து கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நிவாரண தொகுப்பைபெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர் தமிழ்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.