தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் 6 ஆயிரம் ஆட்டோ, சுற்றுலா கார், வேன்கள் 21 நாட்களாக இயங்கவில்லை - ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க டிரைவர்கள் வலியுறுத்தல்

தஞ்சைமாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் 6 ஆயிரம் ஆட்டோ, சுற்றுலா கார், வேன்கள் 21 நாட்களாக இயங்கவில்லை. இதனால் டிரைவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.;

Update: 2020-04-15 07:10 GMT
தஞ்சாவூர்,

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது.

அத்தியாவசிய தேவைக்காக காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க வருபவர்கள் தவிர மற்றவர்களை போலீசார் விரட்டி விடுகின்றனர். அதையும் மீறி தேவையில்லாமல் வாகனங்களில் வருபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 21 நாட்கள் நிறைவடைந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் தஞ்சை மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு உலகப்புகழ்பெற்ற தஞ்சைபெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் கல்லணை, மனோரா, தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன.

வழக்கமான நாட்களில் தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரெயில், பஸ்கள் மூலம் வருபவர்கள் ஆட்டோக்கள், கார் போன்ற வாகனங்களை பயன்படுத்துவது வழக்கம். தஞ்சை ரெயில் நிலையம், புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ராசாமிராசுதார் மருத்துவமனை சாலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா கார், வேன்கள் நிறுத்தப்பட்டு இருக்கும்.

இது தவிர தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டு இருக்கும். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா கார், வேன்கள் இயங்கி வருகின்றன. இதே போல் ஆட்டோக்களும் 3 ஆயிரத்துக்கும் மேல் இயங்கி வருகின்றன. இந்த ஆட்டோக்கள் மற்றும் கார், வேன்களை இயக்கும் டிரைவர்களுக்கு, சவாரியை பொருத்து சம்பளம் கிடைக்கும். மேலும் சுற்றுலா தலம் என்பதால் எப்போதும் சவாரி இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் கடந்த 21 நாட்களாக ஆட்டோ, கார், வேன் டிரைவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். இதில் ஆட்டோ டிரைவர்களுக்கு அரசு ரூ.1,000 நிவாரணம் அறிவித்து வழங்கி வருகிறது. ஆனால் இது பலருக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அனைத்து டிரைவர் களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் செந்தில்நாதன் கூறியதாவது:-

அமைப்புசாரா ஓட்டுனர்கள் அனைவரும் தினமும் சவாரி செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்கள். ஆனால் கடந்த 21 நாட்களாக ஊரடங்கால் குடும்பம் நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர். நலவாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா ஓட்டுனர்களுக்கு மட்டும் அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. மற்ற டிரைவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. ஏற்கனவே 21 நாட்கள் கடத்துவதற்கே பெரும் சிரமப்பட்டு விட்டனர். இந்த நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளதால் நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

பல ஆட்டோ டிரைவர்கள் தங்களது குழந்தைகளுக்கு பால் கூட வாங்கிக்கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே தமிழக அரசு, பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத அனைத்து டிரைவர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசியும் இலவசமாக வழங்க வேண்டும். ஆட்டோ டிரைவர்களுக்கு முன்னுரிமை அளித்து நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்