சேலம் கந்தம்பட்டியில் உணவு இல்லாமல் தவிக்கும் கர்நாடக தெருக்கூத்து கலைஞர்கள் - நிறைமாத கர்ப்பிணியும் பரிதவிப்பு

சேலத்தில் கர்நாடகவை சேர்ந்த தெருக்கூத்து கலைஞர்கள் உணவு இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுடன் நிறை மாத கர்ப்பிணியும் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளார்.

Update: 2020-04-14 22:00 GMT
சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சேலம் கந்தம்பட்டி மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள அங்கம்மா காலனியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 60 பேர் கொட்டகை அமைத்து வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தெருக்கூத்து கலைஞர்கள். சேலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இவர்கள், ராமர், அனுமர், பீமர் உள்ளிட்ட கடவுள் வேடங்களை அணிந்து தெருத்தெருவாக ஊர் சுற்றி பிழைப்பை நடத்தி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தற்போது உணவு இல்லாமல் பரிதவித்து வருகிறார்கள். இதில், குறிப்பாக அங்கு நிறைமாத கர்ப்பிணி ஒருவரும் வசித்து வருகிறார். அவரது பெயர் சியாமளா (வயது 20). இவரது கணவர் பெயர் ரமேஷ். சூரமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவ்வப்போது பரிசோதனை செய்து வந்த சியாமளாவுக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் இதுவரை சியாமளாவுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கும் என்ற சூழ்நிலை இருப்பதால் அவர் பரிதவித்து வருகிறார். மேலும், அங்கு உணவு இல்லாமல் தெருக்கூத்து கலைஞர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து கந்தம்பட்டி அங்கம்மா காலனியில் வசிக்கும் அவர்கள் கூறியதாவது:-

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் கங்காவதி தாலுகா சித்தாப்பூர் கிராமம் எங்களது சொந்த ஊர் ஆகும். அங்கிருந்து பிழைப்பு தேடி சேலத்திற்கு வந்தோம். சேலத்தில் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ராமர், அனுமன், பீமர் உள்ளிட்ட கடவுள் வேடம் அணிந்து தெருத்தெருவாக சென்று வருவோம். பொதுமக்கள் கொடுக்கும் பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறோம். கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வெளியில் செல்லமுடியவில்லை.

ஏற்கனவே கடந்த 21 நாட்களாக ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிட்டு வந்தோம். தற்போது ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறோம். அதிகாரிகள் யாரும் இங்கு வருவது இல்லை. இங்கு, 12 குடும்பங்களை சேர்ந்த 60 பேர் வசித்து வருகிறோம். எனவே, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்