கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சாலைகளில் நடமாடுபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை - சுகாதார துறையினர் நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சாலைகளில் நடமாடுகிறவர்களுக்கு உடல் வெப்பநிலையை சுகாதாரதுறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
கோவை,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் கொரோனா வைரஸ் தொற்று காணப்படுகிறது. எனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அருகில் வசிப்பவர்களை சுகாதார துறை ஊழியர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சந்தேகப்படும்படியான நபர்களை தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் பலர் வீடுகளை விட்டு வெளியே வருவதுடன், சாலைகளில் சுற்றி வருகின்றனர். எனவே போலீசார் ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சுகாதார துறையினர் சாலையில் நடமாடும் பொதுமக்களுக்கு உடல் வெப்ப நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்கின்றனர். இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக காந்திபுரம், சாய்பாபா காலனி, சிங்காநல்லூர், பீளமேடு உள்பட பல்வேறு இடங்களில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சாலையில் நடமாடும் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இதில் யாருக்காவது வெப்பநிலை அதிகமாக காணப்பட்டால் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த நபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார். பின்னர் அவரின் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படும். மேலும் அவரின் முகவரி மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படும். மேலும் அவர் வசித்த பகுதிகளை சேர்ந்த நபர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும்.
இந்த பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.