ஊரடங்கு உத்தரவால் களையிழந்த தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம் - பக்தர்கள் இன்றி கோவில்கள் வெறிச்சோடின
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவால் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது. கோவில்கள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடின.
கிருஷ்ணகிரி,
சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளதால் நேற்று தமிழ்ப்புத்தாண்டு எந்தவிதமான கொண்டாட்டமும் இல்லாமல் களையிழந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ்ப்புத்தாண்டையொட்டி நேற்று வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டபோதிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கோவில் வளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய கோவில்கள் நேற்று காலையிலேயே மூடப்பட்டு இருந்தன.
தமிழ்ப்புத்தாண்டு நாளன்று மாவட்டத்தில் கிராமங்கள், நகரங்கள் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே மேளதாளங்கள் முழங்க கோவில் திருவிழாக்கள், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அதுபோன்ற எந்த நிகழ்வும் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் எந்த கோவில்களிலும் நடக்கவில்லை. ஊரடங்கு உத்தரவு காரணமாக நேற்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள கோவில்களில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டன. இந்த பூஜைகளில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல் தர்மபுரி சாலை விநாயகர் கோவில், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் தமிழ்ப்புத்தாண்டையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கோவில்கள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சென்னை சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. இதே போன்று கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவில், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவில், காந்தி சாலையில் உள்ள வரசித்தி விநாயகர் ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் கோவில்களில் பக்தர்கள் யாரேனும் கூட்டமாக இருக்கிறார்களா? என நகராட்சி ஆணையாளர் சந்திரா ஆய்வு செய்தார். அப்போது சில கோவில்களில் ஒரு சில பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கோவில்களுக்கு கூட்டம் சேராமல் பார்த்து கொள்ளுங்கள் என்றும், பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தி சென்றார்.
வழக்கமாக தமிழ்ப்புத்தாண்டு என்றால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலை முதல் இரவு வரையில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால், சில கோவில்களில் காலையில் பூஜை செய்த பின்னர் நடை சாத்தப்பட்டது. இதனால் கோவில்கள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது.