பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி அமைச்சர்கள் காரை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட முயற்சி - ராசிபுரத்தில் பரபரப்பு
ராசிபுரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் சென்ற காரை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.;
ராசிபுரம்,
ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் இலவச முட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு 300 போலீசாருக்கு தலா 30 முட்டைகளை வழங்கினர்.
இதேபோல் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறையினர் 250 பேருக்கும், நகராட்சி அலுவலகத்தில் 80 பணியாளர்களுக்கும், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 100 பேருக்கும் தலா 30 முட்டைகள் வழங்கப்பட்டது. இதில் ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் பாலசுப்பிரமணியன், ஆர்.சி.எம்.எஸ்.தலைவர் பொன்னுசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் தாமோதரன், மசக்காளிப்பட்டி கூட்டுறவு சங்கத்தலைவர் மற்றும் ஆர்.சி.எம்.எஸ். இயக்குனர் பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறையினருக்கு இலவச முட்டைகளை வழங்கிய அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் அங்கிருந்து நாமக்கல்லுக்கு ஒரே காரில் புறப்பட்டு சென்றனர். ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வழிப்பாதை சாலை அருகே திரண்டு இருந்த தூய்மை பணியாளர்கள் சிலர் அமைச்சர்கள் சென்ற காரை வழிமறித்து முற்றுகையிட முயன்றனர்.
இதைப் பார்த்த அமைச்சர் தங்கமணி காரை நிறுத்த சொன்னார். பின்னர் காரில் இருந்த அமைச்சர்களிடம், தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தினமும் முககவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என புகார் தெரிவித்தனர். எனவே முககவசம், கையுறை, ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்வதோடு, பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது பின்னால் மற்றொரு காரில் வந்த கலெக்டர் மெகராஜ், இறங்கி சென்று தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் ஆகியோர் கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அமைச்சர்கள் இருந்த கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.