உதவி திட்டங்களை அறிவிக்கவில்லை பிரதமர் மோடி உரை ஏமாற்றம் அளிக்கிறது - சித்தராமையா பேட்டி
பிரதமர் மோடியின் உரை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பிரதமர் மோடி நாட்டு மக்களை உத்தேசித்து உரையாற்றியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. இத்தகைய மோசமான நிலையை நாடு கடந்த 30 ஆண்டுகளில் எப்போதும் கண்டதில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உதவி திட்டங்களை அறிவிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. எந்த உதவி திட்டங்களையும் அவர் அறிவிக்கவில்லை. 7 அம்சங்களை கூறிவிட்டு, மக்களை கஷ்டத்தின் கடலில் தள்ளி விட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. விவசாயித்துறை வறுமையில் சிக்கியுள்ளது. தொழிலாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
கிராமப்புற மக்களின் கஷ்டங்கள் சொல்லிமாளாது. இத்தகைய சூழ்நிலையில் மக்களுக்கு உதவும் பொருளாதார திட்டங்களை அறிவித்து இருக்க வேண்டும். விவசாயத்துறைக்கு புத்துணர்ச்சி கொடுத்திருக்க வேண்டும். அவை எதையும் அவர் செய்யவில்லை. ஏழைகள், தொழிலாளர்களுக்கு வாழ்க்கை பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும். கோடிக்கணக்கான இடம்பெயர்ந்த (மைக்ரன்ட்) தொழிலாளர்கள் வீதியில் தள்ளப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த திட்டங்கள் இதுவரை அவர்களை சென்றடையவில்லை.
பிரதமர் அரசியல் உள்நோக்கத்துடன் பேசியுள்ளார். மக்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளார். ஊரடங்கு உத்தரவை நாங்கள் எதிர்க்கவில்லை. கொரோனா வைரஸ் பயங்கரமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதனால் ஊரடங்கு உத்தரவை நீட்டித்ததை நாங்கள் ஆதரிக்கிறோம். இதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். எங்கள் காங்கிரஸ் கட்சியும் இதை ஆதரிக்கிறது.
பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை
ஆனால் கர்நாடக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான ஆதரவு வழங்கவில்லை. தினமும் நூற்றுக்கணக்கானோர் எனக்கு போன் செய்து, தங்களின் கஷ்டங்களை கூறுகிறார்கள். அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. விவசாயிகள் சாகுபடி செய்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல தேவையான போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கவில்லை.
அதனால் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை தெருக்களில் கொட்டுகிறார்கள். இந்திரா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று நான் அடிக்கடி கூறினேன். ஆனால் அதை அரசு ஏற்கவில்லை. இதனால் 50 சதவீத உணவகங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ஆனால் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பத்தில் அரசுகள் தோல்வி அடைந்துவிட்டன.
நிதிநிலை திவாலாகிவிட்டது
பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லே-அவுட்டுகளில் இருக்கும் கார்னர் வீட்டுமனைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. தேவையற்ற செலவுகளை குறைக்க அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இந்த தேவையற்ற செலவுகளை குறைக்காவிட்டால், பாதாளத்தில் விழுந்துள்ள நிதி நிலையை சரிசெய்ய முடியாது.
ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் ரூ.1,000 கோடி உள்ளது. அதை அரசு தனது செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். தேவையற்ற செலவுகளை குறைக்காதது, கர்நாடகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் இருப்பது, நிதித்துறையை சரியாக நிர்வகிக்காமல் இருப்பது, ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது போன்ற காரணங்களினால் மாநிலத்தின் நிதிநிலை திவாலாகிவிட்டது.”
இவ்வாறு சித்தராமையா கூறினார்.