ஊரடங்கு நீட்டிப்பால் அதிருப்தி: மும்பையில் வீதியில் திரண்ட 1,000 வெளிமாநில தொழிலாளர்கள் - சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு மும்பையில் 1,000-க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் வீதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-04-14 23:36 GMT
மும்பை, 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக மராட்டியத்தில் வேலையிழந்த ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களில் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மும்பையில் குடிசைப்பகுதிகளையும் விட்டு வைக்காமல் கொரோனா தாக்கி வருவதால் ஏழை மக்கள், வெளிமாநில தொழிலாளர்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.

ஏற்கனவே நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு நேற்றுடன் முடிந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மராட்டியத்தில் ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து இருந்தார்.

நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு அடுத்த மாதம்(மே) 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக மராட்டியத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர். நேற்று மதியம் 3 மணியளவில் மும்பை பாந்திரா ரெயில் நிலையம் அருகே வீதியில் 1,000-க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் திரண்டனர். அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அரசு வாகன வசதி செய்து தரவேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

ரெயில் நிலையம் அருகே திரண்டவர்கள், அருகே உள்ள குடிசைப்பகுதிகளில் வசித்து வரும் தினக்கூலிகள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இந்த தொழிலார்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது எங்களுக்கு உணவு வேண்டாம். நாங்கள் எங்களது சொந்த ஊருக்கு செல்ல விரும்புகிறோம். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை’’ என்றார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த அசதுல்லா சேக் கூறும் போது, “கையில் இருந்த பணத்தை செலவு செய்துவிட்டோம். தற்போது சாப்பிட எங்களிடம் எதுவுமில்லை. நாங்கள் சொந்த ஊருக்கு செல்லவே விரும்புகிறோம். அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்றார்.

அப்துல் காயுன் என்ற தொழிலாளி, ‘‘நான் மும்பையில் பல ஆண்டுகளாக உள்ளேன். இதுபோன்ற ஒரு நிலையை பார்த்ததே இல்லை. நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு ரெயில் சேவையை தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மும்பையில் வெளிமாநில தொழிலாளர்கள் திரண்ட சம்பவத்தில் மந்திரி ஆதித்ய தாக்கரே மத்திய அரசின் மீது குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில், ‘‘பாந்திராவில் கூடிய தொழிலாளர்கள் அங்கிருந்து கலைக்கப்பட்டனர். மத்திய அரசு வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல சரியான நடவடிக்கை எடுக்காததால் சூரத்திலும் வன்முறை ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் ஏறத்தாழ 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் தேவையில்லை என்று கூறி வருகிறார்கள். சாப்பிடவும் மறுக்கிறார்கள். சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவே வலியுறுத்துகிறார்கள்” என்று கூறி உள்ளார்.

இது குறித்து மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறுகையில், “பிரதமர் மோடி மாநில எல்லைகளை திறக்க உத்தரவிடுவார் என்று வெளிமாநில தொழிலாளர்கள் நினைத்து இருக்கலாம். ஆனால் மாநில எல்லைகள் திறக்கப்படாது என்று போலீசார் அவர்களிடம் எடுத்து கூறினர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிட வசதி தொடர்ந்து செய்து கொடுக்கப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்