கொடுமுடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சிறப்பு அதிகாரிகள் ஆய்வு

கொடுமுடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;

Update: 2020-04-14 21:30 GMT
கொடுமுடி,

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஈரோடு மாவட்டத்துக்கு கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் வெங்கடேஷ், வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் ஈரோடு, பெருந்துறைக்கு சென்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

நேற்று சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் 2 பேரும் கொடுமுடி சுல்தான்பேட்டை மற்றும் காங்கேயம் சாலை ரோஜா நகர் பகுதிக்கு சென்றனர். இந்த பகுதியில் இருந்து 2 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்ததால் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகத்தின் அடிப்படையில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் வசித்த பகுதியை சுற்றியுள்ள 463 குடும்பங்களை சேர்ந்த 1,100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற அதிகாரிகள், மளிகைப்பொருட்கள், பால் போன்ற பொருட்கள் தினமும் வழங்கப்படுகிறதா? காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவுகள் உள்ளதா? கணக்கெடுப்பு நடத்தப்படுகிறதா? என்று கேட்டு தெரிந்துகொண்டனர். பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரின் தந்தையிடம் எதற்காக உங்கள் மகன் டெல்லிக்கு சென்றிருந்தார்? என்று கேட்டறிந்தனர்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதனிடம் சுகாதாரப்பணிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? எனவும், தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத்திடம் அத்தியாவசியப்பொருட்கள் இப்பகுதி மக்களுக்கு முறையே வழங்கப்பட்டு வருகிறதா? எனவும் விசாரித்தனர். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் சுல்தான்பேட்டை, ரோஜா நகர் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் சோதனைச்சாவடிக்கு சென்றனர். அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்தார்கள். முறையான அனுமதி பெறாத எந்த வாகனங்களையும் அனுமதிக்க வேண்டாம் என கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகனிடம் கூறினார்கள். மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களுக்கு சென்னசமுத்திரம் பேரூராட்சி தூய்மைப்பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது அதிகாரிகளுடன் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார், கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், மற்றும் உமா, மண்டல துணை தாசில்தார் மரியஜோசப், சென்னசமுத்திரம் செயல்அலுவலர் வசந்தா, வருவாய் ஆய்வாளர் நிர்மலாதேவி, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். பின்னர் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அதிகாரிகள் சென்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் செய்திகள்